சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது.
இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.
௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.
ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
- பல ஆயிரம் பேர் வேலை.
- முதலீட்டாளர்களின் பணம்.
- இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
- புதிய வெளிநாட்டு முதலீடுகள்.
சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: www.sandhainilavaram.blogspot.com
