Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Apr 30, 2009

பணவீக்கம் 0.57 சதவீதமாக உயர்வு

நாட்டின் பணவீக்க விகிதம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.57 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 0.26 சதவீதமாக இருந்தது. இப்போது 0.31 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் விகிதம் 8.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருள்கள், எரிபொருள் மற்றும் உற்பத்தி பொருள்களின் விலை உயர்ந்ததுதான் பணவீக்கம் விகிதம் அதிகரித்துள்ளதற்குக் காரணம். இதுதவிர பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகள் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
பருத்தி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை 8 சதவீதமும், தேயிலையின் விலை 7 சதவீதமும், நறுமணப் பொருள்களின் விலை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மொத்த விலைக் குறியீட்டு எண் 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Feb 27, 2009

வரி குறைப்பும் தரம் இழப்பும்

பொருளாதார மீட்பு திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, மத்திய அரசு மிகப் பெரிய அளவில் வரி குறைப்பு செய்துள்ளது. உற்பத்தி வரியில் (Excise Duty) இரண்டு சதவீதமும் சேவை வரியில் (Service Tax) இரண்டு சதவீதமும் குறைக்கப் பட்டுள்ளன. இந்த வரி குறைப்பால் உள்ளூர் விலைவாசிகள் ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்ற போதிலும் சர்வதேச தர வரிசையில் இந்தியா மேலும் கீழிறங்கவும் வாய்ப்புள்ளது. இது பற்றி இங்கு பார்ப்போம்.

மேலே சொன்னபடி, மத்திய அரசின் உற்பத்தி வரி அனைத்துப் பொருட்களின் மீதும் 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், டெலிவிஷன், கார், சோப் இன்னும் பல "தயாரிக்கப் பட்ட பொருட்களின்" விலை இரண்டு சதவீதம் குறையும். மிக முக்கியமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறுபது சதவீதத்திற்கு மேல் இடம் பெற்றுள்ள சேவைப் பணிகளின் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக, சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், தொலைபேசி, மின்சார கட்டணங்கள், விமான சேவை கட்டணங்கள் ஆகியவை குறையும். இந்த வரி சலுகைகள் மூலம் ஏற்கனவே பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு ஏற்படும் கூடுதல் வருவாய் இழப்பு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். (பட்ஜெட் பற்றாகுறை என்பது மறைமுக வரி விதிப்பு என்பது வேறொரு பதிவில் விளக்கப் பட்டுள்ளது.) இந்த சலுகையை அனைத்து நிறுவனங்களும் நுகர்வோருக்கு முழுமையாக அளிக்குமா என்பது சந்தேகமே என்றுள்ள நிலையில் இது போன்ற வரிகுறைப்புக்களால், மக்களுக்கு நிகர லாபம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. அதே சமயம் உலக தர வரிசையில் இந்தியாவின் தரம் இறங்க இந்த வரி குறைப்பு வழி வகுக்கிறது. எப்படி என்று பார்ப்போம். இந்திய அரசின் தர மதிப்பீடு உலக தர நிர்ணய நிறுவனங்களால் BBB- என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த தரமதிப்பீடானது, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு என உருவாக்கப் பட்டுள்ள தரவரிசையில் மிகக் கீழே உள்ள இறுதி மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீட்டில் இன்னும் ஒரே ஒரு படி கீழே இறங்கினாலும், இந்தியா முதலீடு செய்ய உகந்த நாடு அல்ல என்ற பொருள் பெறும். அவ்வாறு ஏற்படும் நிலையில், இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து புதிதாக பண வரத்து இருக்காது. சொல்லப் போனால், இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு பணம் வெளியே போகவும் வாய்ப்பு உள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் முதல் திரட்டுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கும். இந்தியாவின் பணமான ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிரான தனது மதிப்பை மேலும் இழக்கும். இறக்குமதி பொருட்களின் விலை கூடுதலாகி விலைவாசிகளும் உயரக் கூடும். எனவே, தர வரிசையில் கீழே இறங்குதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பல சிக்கல்களை உருவாக்கும். சரிவின் விளிம்பில் உள்ள இந்தியாவின் நிலை இப்போது மேலும் மோசமாகி உள்ளது. உலக தர நிர்ணய நிறுவனங்களில் ஒன்றான S&P நிறுவனம் இந்தியாவின் நிலையை "நிலையான" (BBB- Stable) என்ற இடத்திலிருந்து "மோசமான" (BBB- Negative) என்ற இடத்திற்கு தற்போது கீழிறக்கி உள்ளது. இதற்கு உடனடி மற்றும் முக்கிய காரணம் , இந்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறையே என்றும் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தினால், உடனடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படப் போவதில்லை என்றாலும், இந்திய அரசினால் மேலும் புதிய திட்டங்களை உருவாக்க வசதி வாய்ப்பு இல்லாத "நிதி நெருக்கடி நிலை" ஏற்படும். இப்படிப் பட்ட ஓட்டாண்டி நிதி நிலையில், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையக் கூடிய மத்திய அரசு எந்த ஒரு பொருளாதார திட்டத்தையும் உருவாக்க அல்லது செயல் படுத்த விரும்பினால் பட்ஜெட் பற்றாக்குறை இன்னும் அதிகமாகி இந்தியா முதலீட்டு ஸ்தானத்திலிருந்து தவறி விழ வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில், தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அள்ளி வீசும் இப்போதைய அரசு புதிய அரசுக்கு எந்த ஒரு நல்வாய்ப்பையும் வழங்க விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.

-sandhainilavaram

Feb 14, 2009

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம்.

சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது).

சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதே சமயம், பல தனியார் அமைப்புக்கள், இந்தியா இன்னும் கூட குறைந்த அளவே வளர்ச்சிப் பெறும் என்று கணிக்கின்றன. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் போது இந்த வளர்ச்சி சாத்தியமான ஒன்றா என்றும் அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு மிதமான வளர்ச்சி சாத்தியமா என்றும் பார்ப்போம்.

ஒரு நாட்டின் "மொத்த உள்நாட்டு உற்பத்தி" (GDP) பொதுவாக கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப் படுகிறது.

GDP = தனியார் (மக்கள்) செலவிடும் தொகை + அரசு செலவிடும் தொகை + முதலீடுகள் + நிகர ஏற்றுமதி

இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், அதை விடுத்து மீதமுள்ள முக்கிய மூன்று காரணிகள் வருங்காலத்தில் எப்படி மாற்றம் பெறும் என்று பார்ப்போம்.

தனியார் (மக்கள்) செலவிடும் தொகை:

வேலையிழப்பு, வருமான பாதிப்பு, தொழிற்துறையில் குறைந்த லாபம் அல்லது நட்டம் போன்ற காரணங்களால், நடப்பு மற்றும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் தனியாரின் பங்கு குறைவாகவே காணப் படும் என்று தெரிகிறது. அதே சமயம், மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம். தனி மனிதருக்கான பெரும்பாலான தேவைகள் (குடியிருப்பு, தொலைத் தொடர்பு, கல்வி, வாகனங்கள் போன்றவை) இன்னமும் கூட இந்தியாவில் பூர்த்தி ஆகாமல் இருப்பதும், தனியார் செலவினத்தை சற்று அதிகமாகவே வைக்கும் என்று நம்பலாம்.

அரசு செலவிடும் தொகை

இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், இந்திய அரசாங்கங்கள் எப்போதுமே தாராள செலவுக்கு பேர் போனவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியில் அரசின் நேரடி பங்கு குறைந்து போய் விட்ட நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செலுத்த அதிகப் படியான அரசு செலவினம் இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது போக மாநில அரசுகளும் அதிக செலவு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு நல திட்டங்கள், ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்க்கு அதிக சம்பளம், சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த பணம் செலவு செய்யப் படும் என்று தெரிகிறது. இத்தகைய அதிகப் படியான அரசு செலவினங்கள், மேலே சொன்னபடி, தனியார் செலவினம் குறைந்து போவதினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.

முதலீடுகள்:

தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற வருங்காலம் ஆகியவற்றின் காரணமாக, புதிய முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பது சந்தேகமான ஒன்று. மேலும், வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீழ்ச்சி பெற்றுள்ள பங்கு சந்தை மற்றும் கடன் கொடுக்க தயங்கும் வங்கிகள் காரணமாக "மூலதனம் திரட்டல்" என்பது ஒரு சிரமமான காரியமாகவே தெரிகிறது. அதே சமயம், அதிக அளவு கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும், மத்திய நிதி நிறுவனங்கள் வாயிலாக (IIFCL போன்றவை) நீண்ட கால (அடிப்படை கட்டமைப்புக்கான) கடன் வசதிகள் செய்து தருவதும் கவனிக்கத் தக்கது.

பல மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று விட்டிருப்பதால், அந்த நாடுகளின் அரசாங்கங்கள் அதிக அளவில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்தியாவிலோ நிறைவேற்ற வேண்டிய பணிகள் (உதாரணம்: குடிநீர் வசதி, கல்வி வசதி,சாலை வசதி, துறைமுக வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி என்று சொல்லிக் கொண்டே போகலாம்). இவற்றுக்கெல்லாம் அரசு சரியான முதலீட்டு செலவுகள் செய்யுமானால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இப்போது, எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே ஓரளவுக்கு பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், இந்த வளர்ச்சி சாத்தியமே என்று தோன்றுகிறது. மேலும், ஏற்றுமதியையும் உலக பொருளாதாரத்தையும் சார்ந்திராத இந்த துறை மிதமான வேகத்தில் (பருவ மழை சரியாக இருக்கும் பட்சத்தில்) இன்னும் சில ஆண்டுகள் வளரும் என்று கருதப் படுகிறது.தொழிற்துறை இந்த பொருளாதார வீழ்ச்சியினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், மோசமான காலம் முடிந்து விட்டதாகவே சில விற்பன்னர்கள் கருதுகின்றனர். சாலை திட்டங்கள், மின்சார உற்பத்தித் திட்டங்கள் போன்றவை இந்த துறைக்கு கை கொடுக்கும் என்று நம்பலாம்.

வெளிநாட்டு ஏற்றுமதியைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் என்று தோன்றினாலும், உள்நாட்டை சார்ந்த சேவை நிறுவனங்கள் (கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு போன்றவை) மிதமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.

அதே சமயம், அகலக் கால் வைத்த நிறுவனங்கள் தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள மிக அதிகமான ஊதியக் குழு நிலுவை பணம் விரைவில் புழக்கத்திற்கு வரவிருப்பது உள்ளூர் சேவைத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்க படுகிறது.ஆக மொத்தத்தில், கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் காணப் பட்ட அசுர வளர்ச்சியினை இன்னும் சில காலத்திற்கு எதிர்பார்க்க முடியாதென்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், உலகின் பல நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?


Jan 8, 2009

பொருளாதார பயங்கரவாதம்

சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.

சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது.

இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.

௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

  • பல ஆயிரம் பேர் வேலை.
  • முதலீட்டாளர்களின் பணம்.
  • இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
  • புதிய வெளிநாட்டு முதலீடுகள்.

சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: www.sandhainilavaram.blogspot.com

Jan 2, 2009

இந்தியப் பொருளாதாரம்: தலைமை வங்கி மற்றும் மத்திய அரசின் அறிவிப்புகள்

தளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக இந்திய தலைமை வங்கியும் மத்திய அரசும் கிரியா ஊக்கித் திட்டத்தின் இரண்டாம் பகுதியை இன்று அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பற்றியும் இவை எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம்.

முதலில் தலைமை வங்கியின் அறிவிப்புகள்

மாற்று வட்டி வீதம் (ரெபோ) ஒரு சதவீதம் (5.50%) குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக வணிக வங்கிகள் இந்திய தலைமை வங்கியிடம் இருந்து குறைந்த கால நோக்கில் கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டித் தொகை குறையும். இதனால், வங்கிகள் பொது மக்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், ரொக்க கையிருப்பு வீதம் 0.50 சதவீதம் I5.00%) குறைக்கப் பட்டுள்ளது. இதனால், சுமார் 20,000 கோடி ரூபாய் வங்கிகளின் கையிருப்பில் அதிகமாக இருக்கும். இந்த நடவடிக்கை மூலமாக, பொது மக்களுக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் வங்கிகளால் கடன் தர முடியும்.

இரண்டாவது மத்திய அரசின் அறிவிப்புகள்

வணிக நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் வெளிநாட்டு கடன் பெறும் சில நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன. சிறிய நகர குடியிருப்புக்களை அமைப்பதற்கு வெளிநாட்டு கடன் வசதி அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதே போல, சிறிய மற்றும் இடை நிலை தொழிற் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் இந்திய வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெறும் விதிமுறைகள் தளர்த்தப் பட்டுள்ளன. அரசு வங்கிகளுக்கான கடன் வழங்கும் இலக்குகள் அதிகப் படுத்தப் பட்டுள்ளன.

மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அடிப்படை கட்டுமான முதலீடுகள் செய்வதற்காக கூடுதலாக 0.50 சதவீதம் கடன் பெற அனுமதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30,000 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

ஏற்றுமதிக்கான தொகையை இந்திய ரூபாயில் மாற்ற சில சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் சில ஏற்றுமதி துறைகளுக்கு வரி சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப் பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்களை குறைக்க கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் எளிய மற்றும் மத்திய தர வர்க்கத்தினருக்காக கட்டப் படும் குடியிருப்புகளுக்காக நில வசதி செய்து தர மாநில அரசுகள் கேட்டுக் கொள்ள பட்டிருக்கின்றன. மத்திய மாநில அரசுகளின் நல்வாழ்வு திட்டங்கள் விரைவில் செயல் படுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் வரவேற்கப் படவேண்டியவையே என்றாலும், இந்த திட்டங்கள் மூலம் குறைந்த கால நோக்கில் பங்கு மற்றும் இதர சந்தைகளில் ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றாலும், இவை மட்டுமே இந்தியாவை நல்ல வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியுமா என்பது ஒரு கேள்விக் குறி. எனது பார்வையில் இந்த திட்டங்கள் யானைப் பசிக்கு வழங்கப் படும் சோளப் பொரிகள் போலவே காட்சி அளிக்கின்றன.

1990 களுக்கு பிறகு, இந்திய அரசு பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் அரசின் பங்கு குறைவாக இருக்கும் மேலை நாட்டுப் பாணியை பின்பற்ற ஆரம்பித்தது. இதன் படி அரசு இயந்திரம் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சில பொது சேவைகள் போன்ற குறைந்த வட்டத்திற்குள்ளேயே செயல் பட வேண்டும் என்றும் பொருளாதாரம் என்பது மக்கள் (வணிக நிறுவனங்கள்) கையில் என்றும் கருதிய ஆதாம் ஸ்மித் அவர்களின் காபிடலிச கொள்கை இந்தியாவிற்குள் நுழைந்தது. பொருளாதாரம் (வணிக நிறுவனங்கள்) மேம்பட அரசு நல்ல கடன் வசதியை மட்டும் செய்து கொடுத்தால் மட்டும் போதும் அரசு பொருளாதாரத்தில் நேரடியாக தலையிடக் கூடாது என்ற மேலை நாட்டு சிந்தனையாளர்களின் போக்கு (முக்கியமாக பணக்காரர்களிடையே) நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் காபிடலிசத்தின் தலைநகரமாக கருதப் படும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலைநாடுகளில் பெரியதொரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளை தேசிய மயமாக்குதல், பொருளாதாரத்தில் அரசு பெரும் முதலீடுகளை செய்தல் என்று இந்தியா 1960 மற்றும் 70 களில் நடைமுறைப் படுத்திய "பொருளாதாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்தல்" என்ற பழைய பாணி இப்போது மேலைநாடுகளில் (ஆம். நம் பொருளாதார மேதைகள் படித்த மற்றும் கோயில்களாக கருதும் அதே நாடுகள்தான்) பின்பற்ற ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு நண்பர், அங்கு இந்திரா காந்தி ஒரு சிறந்த தீர்க்கதரிசியாக இப்போது போற்றப் படுவதாக கூறினார்.

எனவே மேலை நாடுகளில் தோற்றுப் போன ஒரு பாணியை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா என்பது எனது கேள்வி. மேலும் இந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்குமிடையே ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு. அதாவது, வளர்ச்சியில் ஒரு நிறைவை பெற்றுள்ள அந்த நாடுகளின் அரசால் மேலும் புதிய முதலீடுகள் செய்து அதிக வளர்ச்சி காணச் செய்வது கடினமான காரியம். அதே சமயம் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு நல்ல குடியிருப்பு வசதி, தூய குடிநீர் வசதி, ஆரம்ப கல்வி, சாலை வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி இல்லாத நிலையில் அரசு நேரடியாக வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டால் இன்னும் நூறு ஆண்டுகள் கூட நம்மால் பத்து சதவீத வளர்ச்சியை தொடர்ச்சியாக காண முடியும். இதனால் அனைத்து தரப்பினரும் நலம் பெற முடியும். பணக்காரர்களையும் பெரும் வணிக நிறுவனங்களையும் சேர்த்துதான். எப்படியென்றால், அவர்களுடைய இப்போதைய பிரச்சினை பணத்தட்டுப்பாடு அல்ல. உற்பத்தித் தேவை குறைபாடுதான். அரசு நலத் திட்டங்களை நிறைவேற்றும் போது நிறைய பொருட்களுக்கும், உழைப்பிற்கும் தேவைகள் ஏற்படும். இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் கூட்ட முடியும். லாபம் அதிகம் பார்க்க முடியும்.

மக்களுடைய மனதில் எழும் ஒரு பொதுவான கேள்வி. ஏழை நாடாகக் கருதப் படும் இந்தியாவில் இவ்வளவு நலத் திட்டங்களை நிறைவேற்ற பண வசதி எப்படி கிடைக்கும் என்பதுதான். இதற்கு பல வழிகள் உண்டு. முறையான வரி வசூல், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தை திரும்பப் பெறுதல், புதிதாக அரசுப் பத்திரங்கள் வெளியிடுதல் முதலியன.(வட்டி வீதங்கள் குறைந்த நிலையில் இது சாத்தியமே). எனவே அரசு உடனடியாக (தங்க நாற்கர சாலை போன்ற) புதிய சாலைத் திட்டங்கள், மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெரிய விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை தயாரித்து நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் இப்போதைக்கு உலக சந்தைகளில் எரிபொருட்கள், உலோகங்கள் மற்றும் மூலப் பொருட்கள் விலை குறைந்திருப்பது பெரிய முதலீடுகள் செய்ய வசதி உள்ள நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும்.

நன்றி: www.sandhainilavaram.blogspot.com