Aug 9, 2009

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன கணக்குகள் மாயம்: சிஏஜி திணறல்

கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலவழித்த கணக்குகள் மாயமாகியுள்ளன. இதனால் இதைத் தணிக்கை செய்யும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) அதிகாரி திணறி வருகின்றார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இத் தொகை மிக அதிகம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அனில் அம்பானி வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு சிஏஜி-யை அரசு கேட்டுக் கொண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு செலவிட்ட தொகைக்கான கணக்கு விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் தணிக்கை பணிகள் குறித்த முழு விவரத்தை வெளியிட முடியவில்லை என்று தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்ணெய், எரிவாயு உற்பத்தி மற்றும் அதை பகிர்ந்து கொள்வது தொடர்பான கொள்கை மட்டுமின்றி மேலும் இந்நிறுவனம் மேற்கொண்ட 6 ஒப்பந்தங்கள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தபடி அது செலவிட்ட தொகை ரூ. 45 ஆயிரம் கோடி. இதுகுறித்து 3 தணிக்கை குழுக்கள் மேற்கொண்டது. இதில் ஒன்றை ஹைட்ரோ கார்பன்கள் இயக்ககம் மேற்கொண்டதாக அதன் இயக்குநர் வி.கே. சிபல் தெரிவித்தார். மற்ற தணிக்கைகளும் அரசு பரிந்துரைத்த தணிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

செலவுத் தொகையை உயர்த்திச் சொல்வதில் உரிமையாளருக்கு எவ்வித பயனும் கிடையாது. இதனால் அரசுக்கோ அல்லது ஒப்பந்ததாரருக்கோ பயனில்லை. எந்த ஒரு நிறுவனமும் தனது முதலீட்டை அதிகமாக கூறுவது கிடையாது. வருவாய் தராத மூலதனத்தில் முதலீடு செய்வது நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும். எனவே இதுபோன்ற குற்றச் சாட்டுகள் சரியானவை அல்ல என்று குறிப்பிட்டார் சிபல்.

இந்தப் பிரச்னைக்குத்தீர்வு காணும் முயற்சியில் சிஏஜி ஈடுபட்டுள்ளது. இதன்படி இரண்டு ஆண்டுகள் கணக்கைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளதாக தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.