Feb 14, 2009

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம்.

சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது).

சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதே சமயம், பல தனியார் அமைப்புக்கள், இந்தியா இன்னும் கூட குறைந்த அளவே வளர்ச்சிப் பெறும் என்று கணிக்கின்றன. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் போது இந்த வளர்ச்சி சாத்தியமான ஒன்றா என்றும் அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு மிதமான வளர்ச்சி சாத்தியமா என்றும் பார்ப்போம்.

ஒரு நாட்டின் "மொத்த உள்நாட்டு உற்பத்தி" (GDP) பொதுவாக கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப் படுகிறது.

GDP = தனியார் (மக்கள்) செலவிடும் தொகை + அரசு செலவிடும் தொகை + முதலீடுகள் + நிகர ஏற்றுமதி

இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், அதை விடுத்து மீதமுள்ள முக்கிய மூன்று காரணிகள் வருங்காலத்தில் எப்படி மாற்றம் பெறும் என்று பார்ப்போம்.

தனியார் (மக்கள்) செலவிடும் தொகை:

வேலையிழப்பு, வருமான பாதிப்பு, தொழிற்துறையில் குறைந்த லாபம் அல்லது நட்டம் போன்ற காரணங்களால், நடப்பு மற்றும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் தனியாரின் பங்கு குறைவாகவே காணப் படும் என்று தெரிகிறது. அதே சமயம், மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம். தனி மனிதருக்கான பெரும்பாலான தேவைகள் (குடியிருப்பு, தொலைத் தொடர்பு, கல்வி, வாகனங்கள் போன்றவை) இன்னமும் கூட இந்தியாவில் பூர்த்தி ஆகாமல் இருப்பதும், தனியார் செலவினத்தை சற்று அதிகமாகவே வைக்கும் என்று நம்பலாம்.

அரசு செலவிடும் தொகை

இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், இந்திய அரசாங்கங்கள் எப்போதுமே தாராள செலவுக்கு பேர் போனவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியில் அரசின் நேரடி பங்கு குறைந்து போய் விட்ட நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செலுத்த அதிகப் படியான அரசு செலவினம் இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது போக மாநில அரசுகளும் அதிக செலவு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு நல திட்டங்கள், ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்க்கு அதிக சம்பளம், சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த பணம் செலவு செய்யப் படும் என்று தெரிகிறது. இத்தகைய அதிகப் படியான அரசு செலவினங்கள், மேலே சொன்னபடி, தனியார் செலவினம் குறைந்து போவதினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.

முதலீடுகள்:

தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற வருங்காலம் ஆகியவற்றின் காரணமாக, புதிய முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பது சந்தேகமான ஒன்று. மேலும், வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீழ்ச்சி பெற்றுள்ள பங்கு சந்தை மற்றும் கடன் கொடுக்க தயங்கும் வங்கிகள் காரணமாக "மூலதனம் திரட்டல்" என்பது ஒரு சிரமமான காரியமாகவே தெரிகிறது. அதே சமயம், அதிக அளவு கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும், மத்திய நிதி நிறுவனங்கள் வாயிலாக (IIFCL போன்றவை) நீண்ட கால (அடிப்படை கட்டமைப்புக்கான) கடன் வசதிகள் செய்து தருவதும் கவனிக்கத் தக்கது.

பல மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று விட்டிருப்பதால், அந்த நாடுகளின் அரசாங்கங்கள் அதிக அளவில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்தியாவிலோ நிறைவேற்ற வேண்டிய பணிகள் (உதாரணம்: குடிநீர் வசதி, கல்வி வசதி,சாலை வசதி, துறைமுக வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி என்று சொல்லிக் கொண்டே போகலாம்). இவற்றுக்கெல்லாம் அரசு சரியான முதலீட்டு செலவுகள் செய்யுமானால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இப்போது, எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே ஓரளவுக்கு பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், இந்த வளர்ச்சி சாத்தியமே என்று தோன்றுகிறது. மேலும், ஏற்றுமதியையும் உலக பொருளாதாரத்தையும் சார்ந்திராத இந்த துறை மிதமான வேகத்தில் (பருவ மழை சரியாக இருக்கும் பட்சத்தில்) இன்னும் சில ஆண்டுகள் வளரும் என்று கருதப் படுகிறது.தொழிற்துறை இந்த பொருளாதார வீழ்ச்சியினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், மோசமான காலம் முடிந்து விட்டதாகவே சில விற்பன்னர்கள் கருதுகின்றனர். சாலை திட்டங்கள், மின்சார உற்பத்தித் திட்டங்கள் போன்றவை இந்த துறைக்கு கை கொடுக்கும் என்று நம்பலாம்.

வெளிநாட்டு ஏற்றுமதியைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் என்று தோன்றினாலும், உள்நாட்டை சார்ந்த சேவை நிறுவனங்கள் (கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு போன்றவை) மிதமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.

அதே சமயம், அகலக் கால் வைத்த நிறுவனங்கள் தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள மிக அதிகமான ஊதியக் குழு நிலுவை பணம் விரைவில் புழக்கத்திற்கு வரவிருப்பது உள்ளூர் சேவைத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்க படுகிறது.ஆக மொத்தத்தில், கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் காணப் பட்ட அசுர வளர்ச்சியினை இன்னும் சில காலத்திற்கு எதிர்பார்க்க முடியாதென்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், உலகின் பல நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?