Oct 24, 2009

முன்கூட்டி கடனை செலுத்த கட்டணம் வசூலிக்க கூடாது: ரிசர்வ் வங்கி

வீடு கட்ட வாங்கிய கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது அபராதம், கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வீடு, வாகனக் கடன் பெறுவோர், முன்கூட்டி கடனை முழுவதுமாகவோ, பகுதியாகவோ திருப்பிச் செலுத்தினால் பல வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. மீதமுள்ள கடன் தொகை மீது அதிகபட்சம் 3 சதவீதம் வரை கூடுதல் வட்டி வசூலிக்கின்றன. இதனால், கடனில் இருந்து வீடு, வாகனத்தை மீட்க பணம் திரட்டியும் வாடிக்கையாளர்களால் கடனை முழுவதுமாக அடைக்க முடிவதில்லை.

இதுபற்றி ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், ரிசர்வ் வங்கியிடம் இதுபற்றி விளக்கம் கேட்டிருந்தார்.

கடனை முன்கூட்டி திருப்பிச் செலுத்தும் போது வங்கிகள் விதிக்கும் அபராதம், கூடுதல் வட்டி பற்றி ரிசர்வ் வங்கிக்கு தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால் வங்கிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வங்கிகள் இடையே வட்டி வசூலிப்பில் வித்தியாசத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேட்டிருந்தார்.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியதாவது:

கடனை முன்கூட்டி திருப்பிச் செலுத்தும்போது அபராதம் அல்லது கூடுதல் வட்டி வசூலிப்பதை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. கடன்கள் மீது அதிக வட்டி வசூலிப் பதை தவிர்க்க வங்கிகள் தங்களுக்குள் விதிமுறைகளை ஏற்படுத்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. கடன்கள் உட்பட எல்லா வகையிலும் வங்கி செயல்பாடுகளில் அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற விஷயங்களில் வங்கிகள் தங்களுக்குள் கோட்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.