Jun 19, 2010

ரூ.99ல் பிராட்பேண்ட் சேவை வழங்குகிறது பிஎஸ்என்எல்

இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களில், இணையதள சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, கிராமப்புற மக்களுக்கு பிராட்பேண்ட் வசதியை ரூ.99க்கு வழங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. கிராம மக்களுக்கு இணையதள அறிவை பெருக்கும் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 99 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 400எம்பி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு. பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 150 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 1 ஜிபி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு

Oct 24, 2009

முன்கூட்டி கடனை செலுத்த கட்டணம் வசூலிக்க கூடாது: ரிசர்வ் வங்கி

வீடு கட்ட வாங்கிய கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது அபராதம், கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வீடு, வாகனக் கடன் பெறுவோர், முன்கூட்டி கடனை முழுவதுமாகவோ, பகுதியாகவோ திருப்பிச் செலுத்தினால் பல வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. மீதமுள்ள கடன் தொகை மீது அதிகபட்சம் 3 சதவீதம் வரை கூடுதல் வட்டி வசூலிக்கின்றன. இதனால், கடனில் இருந்து வீடு, வாகனத்தை மீட்க பணம் திரட்டியும் வாடிக்கையாளர்களால் கடனை முழுவதுமாக அடைக்க முடிவதில்லை.

இதுபற்றி ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், ரிசர்வ் வங்கியிடம் இதுபற்றி விளக்கம் கேட்டிருந்தார்.

கடனை முன்கூட்டி திருப்பிச் செலுத்தும் போது வங்கிகள் விதிக்கும் அபராதம், கூடுதல் வட்டி பற்றி ரிசர்வ் வங்கிக்கு தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால் வங்கிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வங்கிகள் இடையே வட்டி வசூலிப்பில் வித்தியாசத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேட்டிருந்தார்.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியதாவது:

கடனை முன்கூட்டி திருப்பிச் செலுத்தும்போது அபராதம் அல்லது கூடுதல் வட்டி வசூலிப்பதை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. கடன்கள் மீது அதிக வட்டி வசூலிப் பதை தவிர்க்க வங்கிகள் தங்களுக்குள் விதிமுறைகளை ஏற்படுத்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. கடன்கள் உட்பட எல்லா வகையிலும் வங்கி செயல்பாடுகளில் அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற விஷயங்களில் வங்கிகள் தங்களுக்குள் கோட்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணம் வழங்காத ஏடிஎம் கணக்கில் பணத்தை குறைத்த வங்கிகளுக்கு 10,000 அபராதம்

ஏடிஎம்மில் பணம் வழங்காமல் கணக்கில் ரூ.3,000 குறைத்த வங்கி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் கிரீஷ். இவர் 2005ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஏடிஎம்மில் ரூ.3,000 எடுக்க சென்றார். பணம் வரவில்லை. ஆனால், கிரீஷ் கணக்கில் இருந்து ரூ.3,000 குறைந்திருந்தது.புகார் செய்தும் ஓர் ஆண்டுக்குப் பிறகு 2006ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அவரது கணக்கில் ரூ.3,000 வரவு வைக்கப்பட்டது. வங்கி சேவையில் குறைபாடு உள்ளது என்று கூறி, சென்னை வடக்கு மா வட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். வழக்கறிஞர் அகிலா வாதாடினார். வங்கியின் இந்த சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.20,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.சம்பந்தப்பட்ட கீழ்பாக்கம் இந்தியன் வங்கி கிளை, ராயப்பேட்டை தேனா வங்கி கிளை ஆகியவை இணைந்து ரூ.10,000 அளிக்க உத்தரவிடப் பட்டது.

Oct 3, 2009

விரைவில் வருகிறது: செக் ரீடிங் ஏ.டி.எம்.,

இந்தியாவில் விரைவில் செக்(காசோலை) ரீடிங் ஏ.டி.எம்., வரவுள்ளது. இந்த ஏ.டி.எம்., மூலம் காசோலை சம்பந்தப் பட்ட பரிமாற்றங்களை ஏ.டி.எம்., மூலமாகவே பெற்று கொள்ளலாம்.

இது தற்போது, வட அமெரிக்க மற்றும் யுரோ உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை ஏ.டி.எம்.,கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய வங்கிகளான ஸ்டோட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பீ.ஐ. வங்கி, ஐ.என்.ஜி., வைஷியா உள்ளிட்ட வங்கிகள் செக் ரீடிங் ‌ஏ.டி.எம்.,மை இந்தியாவில் அறிமுகப் படுத்தும் ஆர்வத்தில் இருந்து வருகின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியும் வரவேற்பு அளித்து வருகிறது. எனவே, நம் நாட்டிலும் விரைவில் செக் ரீடிங் ஏ.டி.எம்.,களை எதிர்பார்க்கலாம்.